
MOVIE : SAROJA
STARRING : VAIBHAV,S.P. CHARAN,PRAKASHRAJ,NIKITHA AND KAJAL
DIRECTOR : VENKAT PRABU
RATING : VERY GOOD
'சார்'ரோஜா என்றே வைத்திருக்கலாம். 'டேய் மச்சான்...' என்பதே வழக்கத்தில் இருக்கிற காலத்தில், படம் முழுக்க நண்பர்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளும் 'சார்' புதுசு. இனிமையும் கூட! நான்கு நண்பர்கள் ஹைதராபாத் கிரிக்கெட் மேட்ச் பார்க்க கிளம்புகிறார்கள். போகிற வழியில் டிராபிக் ஜாம். வேறு ரூட் பிடித்து போய்விட நினைக்கும் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்த சரோஜா.
சரண், பிரேம்ஜி, வைபவ், சிவா ஆகிய நால்வரும், ஒரு கேரவேனில்(?) ஐதராபாத் கிளம்பும் போதே ஆரம்பித்துவிடுகிறது ரகளை விருந்து. அதிலும் பிரேம்ஜி கொட்டாவி விட்டால் கூட, கைதட்ட தொடங்கிவிடுகிறார்கள் ரசிகர்கள். பார்க்கிற எல்லா பெண்களையும் பாரதிராஜா பட தேவதைகள் சூழ காதலிக்க ஆரம்பித்துவிடும் இவருக்கு, நேரம் காலம் தெரியாமல் வருகிற ஜோக் மூடுதான் தியேட்டரை சின்னாபின்னமாக்குகிறது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று ரயிலில் ஏறி ஓடுகிற நால்வரில், சரணின் பர்ஸ் சம்பவ இடத்தில் விழுந்துவிட, அவர் இறங்கிக் கொள்கிறார். மற்ற நண்பர்களும் ஓடும் ரயிலில் இருந்து குதித்துவிட, கடைசியாக குதிக்கும் பிரேம்ஜி, "இந்த ரயில் சென்னை போவாதா?" என்கிறாரே அப்பாவியாக! திமிலோகப்படுகிறது தியேட்டர். அதே மாதிரி உயிர்போகும் தருவாயில் மனைவி போட்டோவை வைத்துக் கொண்டு கண்கலங்கும் சரணிடம், 'உங்க பிகரா சார்?' என்று கேட்கிற பிரேம்ஜியின் குறும்பை ரசிக்கலாம். ருசிக்கலாம்
நகைச்சுவை வெடியை நாலு பேருக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. சின்ன ஓட்டை வழியாக தப்பிக்க நினைக்கும் சரணின் பின் பக்கத்தில் விழும் ஒவ்வொரு அடியும் அஹ்ஹஹ்ஹா! இடையிடேயே சீரியஸ் மூடுக்கு கொண்டு போவது கடத்தப்பட்ட வேகாவின் கண்ணீரும், சம்பத்தின் பிளாக்மெயிலும்.
கோடீஸ்வர பிரகாஷ்ராஜின் ஒரே பெண்ணை கடத்தி வந்து பிளாக்மெயில் செய்யும் சம்பத், போலீசுக்கு போகாதே என்று எச்சரிப்பதும், அதையும் மீறி போலீசுக்கு போகும் பிரகாஷ்ராஜுக்கு கொடுக்கும் அதிரடி ட்ரீட்மென்டும் பகீர். காவல் துறை உயர் அதிகாரி ஜெயராம், க்ளைமாக்சில் காட்டுகிற முகம் வழக்கமான தமிழ்சினிமா. பிறரை மிரட்டியே பழகிய பிரகாஷ்ராஜுக்கு இந்த படத்தில் வேறு மாதிரி ரோல். இதற்கு இவர் எதற்கு?
நிகிதாவின் ஆட்டம் கத்தாழ முள்ளாகி குத்துகிறது. ஆனாலும், அந்த 'மின்வெட்டு' பங்களாவுக்குள் மேற்படி கோஷ்டிகளின் ஆட்டம் எம்.ஜி.ஆர்-நம்பியார் கால சினிமாவை நினைவூட்டுகிறது.
அரையிருட்டு... கட்டப்பட்ட கைகளும், அழுது வடியும் கண்களுமாக இருக்கும் போதே இத்தனை அழகா? வேகாவின் வரவு ஆஹா!
சாமான் நிக்கோலாவை தவிர, சரோஜாவில் சென்னை 28 டீமும் இருக்கிறது. ஒரு சில வினாடிகள் வந்தாலும், இந்த பழைய கோஷ்டியை பார்த்து பரவசப்படுகிறார்கள் ரசிகர்கள். அழகான மனைவியையும், பெண்ணையும் வைத்துக் கொண்டு, பிரமானந்தம் படுகிற அவஸ்தைகளும் பேரானந்தம்!
யுவன்சங்கர் ராஜாவே ஒரு இசை ஆல்பத்தை அலங்கரிப்பது போல ஆடிவிட்டு போகிறார். பாடல்களில் வெஸ்டர்ன் ஆதிக்கம். பின்னணி இசை மிரட்டல். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, அரையிருட்டிலும் ஜொலிக்கிறது.
வெங்கட் பிரபு அடித்திருக்கும் மற்றுமொரு சிக்ஸர்!
No comments:
Post a Comment