![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuI6ktVS-kfbwE1lz6c1qHFWxtu-PgJmoFdSKcv-lww2bDzKcr-pdKHYKrSdKaWR2WclvrAWrQUa3q0lV-4lXTYyVq0QOdo3dUw4n8bpMlHV-mMWyfi-fKtWSU1Hb1RPcs0Cv4jdn_bcDV/s320/Kuselan_review.jpg)
MOVIE : KUSELAN
ACOTRS : SUPERSTAR "RAJNIKANTH",NAYANATARA,PASUPATHI,MEENA,VADIVELU,LIVINGSTONE
DIRECTOR : P.VASU
MUSIC : G.V.PRAKASH
RATING : VERY GOOD
ஐஸ்கிரீம் வண்டியில் ஆலயமணியை கட்டிய மாதிரி எளிமையான கதையில் காஸ்ட்லியான ரஜினி. எத்தனை நாளாச்சு, இப்படியொரு ரஜினியை பார்த்து. அற்புதம்!
சின்ன வயதில் சேர்ந்து படிக்கும் நண்பர்களில் பசுபதிக்கு பாத்தியப்பட்டது பரிதாப சலூன் மட்டுமே. ஆனால் ரஜினி? ஊர் உலகமே கொண்டாடும் சூப்பர் ஸ்டார். காதலியோடு ஊரைவிட்டு ஓடி வந்த பசுபதி, எங்கோ ஒரு கிராமத்தில் மர நாற்காலியும் மக்கிப்போன கடையுமாக வாழ்க்கையை நடத்துகிறார். அன்றாட சோற்றுக்கே அல்லாடுகிற பசுபதிக்கு, அதே ஊரில் படப்பிடிப்புக்கு வரும் சூப்பர் ஸ்டாரை பார்க்க கொள்ளை ஆசை. ஆனால் டைட் செக்யூரிடி, தள்ளுமுள்ளுகளில் நண்பனை எட்டி நின்று கூட முழுசாக பார்க்க முடியாத சூழல். பக்தனை தேடி பரந்தாமனே வந்த மாதிரி பசுபதி வீட்டிற்கே ரஜினி வருகிறார். இந்த கடைசிநேர க்ளைமாக்சை உருப்படியாக பார்க்க முடியாதபடி உருண்டு நிற்கிறது கண்ணீர்.
பசுபதிக்கு முதல் ஷொட்டு. ஊரே திரண்டு வந்து சூப்பர் ஸ்டாரின் நண்பர் என்று கொண்டாடும் போதும், தாழ்வு மனப்பான்மையால் ரஜினியை நெருங்க முடியாமல் தவிக்கும் போதும் பசுபதி பதறவைக்கிறார். அவரது கண்கள் சொல்லும் ஆயிரம் உணர்ச்சிகளுக்கு டயலாக்கே தேவையில்லை. ஊராரின் ஏச்சு பேச்சுகளுக்கு பயந்து எங்காவது போயிடலாம் என்று மனைவியை அழைக்கும்போது, அந்த இயலாமை பதற வைக்கிறது.
கழுவி துடைத்து வைத்த குத்து விளக்கு போலிருக்கிறார் மீனா. அழுக்கு குடிசைக்கு சம்பந்தமில்லாத தோற்றம். ஆனாலும், கணவனே கண் கண்ட தெய்வமாக மதிக்கும் அந்த குணமும் அவரைப்போலவே பளிச்!
செட்டப் போலீஸ் உதவிடன் பலரையும் கடத்தி வந்து மொட்டையடிக்கும் வடிவேலு, அந்த ஊருக்கு வரும் டி.எஸ்.பி யையே மொட்டையடிப்பது வெடிச்சிரிப்பு. ரஜினியை சந்திக்க அவர் செய்யும் பகீரத பிரயத்தனங்கள் கிச்சுகிச்சு. ஆனாலும் சொந்த பெண்டாட்டியை திருட்டுத்தனமாக சைட் அடிக்கும் காட்சி உவ்வேய்... இதுவாவது பரவாயில்லை. நயன்தாரா உடை மாற்றும் காட்சியில் வடிவேலுவின் மீசை சுட்டிக்காட்டுவது எதை?
ஆர்.சுந்தர்ராஜனின் அலட்டலை ரசிக்க முடிகிறது. இவரைக் கொண்டே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ரஜினி சொல்லும் விளக்கத்தில் எக்கச்சக்க கோபம் எட்டிப்பார்க்கிறது. அதுவும் நியாயம்தான்!
மியூசியத்தில் வைத்த மெழுகு பொம்மையாக நயன்தாரா. ரஜினி படமாக இருந்தாலும் நயன்தாராக்கள் 'நெஞ்சு' நிமிர்த்தினால்தான் நிம்மதி!
கூட்டி கழித்துப் பார்த்தால் அறுபது நிமிடங்களே வருகிறார் ரஜினி. ஆனாலும் அவரை படம் முழுக்க நிரப்பி, ஒரு புது டிரெண்டையே நிறுவியிருக்கிறார் பி.வாசு. க்ளைமாக்சில் கண்கலங்கும் ரஜினியும், அவர் பேசும் வசனங்களும் நட்புக்கு போடுகிற உரம். மாதா, பிதா, குரு, நண்பன், பிறகுதான் தெய்வம் என்கிறாரே, விசில் பறக்கிறது தியேட்டரில். ரஜினி படத்தில் என்னென்ன இருக்குமோ எல்லாம் இருக்கிறது. இருந்தும் ஒரு ஃபைட் கூட போடாத ரஜினி, கொம்பு சிலுப்பாத முரட்டுக்காளை.
விருந்தில் இசையும், ஒளிப்பதிவும் திகட்ட திகட்ட சுவை! ஜி.வி.பிரகாஷ், அரவிந்த் கிருஷ்ணாவுக்கு தனி பாராட்டுகள்.
பி.வாசுவின் ஹிட் லிஸ்ட்டில் சந்திரமுகி மெகா என்றால், குசேலன் ஆஹா!!
No comments:
Post a Comment